Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை'


1940, பாரதம் ஆங்கிலேயர்களிடமும், விவசாயிகள் நிலப்பிரபுக்களிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த காலம். சிவப்புச் சிந்தனை சூறாவளி போல இளையோர்களிடமும், அடிமைப்பட்டுக்கிடந்த பாட்டாளிகளிடம் பரவிய காலமும் இதுவே. வடக்கு கேரளாவில் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்த கையூர்(தற்போது கண்ணனூர்) கிராமத்தில் நம்பியார், நம்பூத்ரி என்ற இரண்டு நிலப்பிரபுக்களிடம் தங்கள் உடைமைகளையும்,உழைப்பையும் அர்ப்பணித்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர் கையூர் விவசாயிகள். அதே ஊரைச் சேர்ந்த அப்பு, அபுபக்கர், சிருகண்டன், குஞ்ஞம்பு ஆகிய நான்கு தோழர்கள் கம்யூனிஸ்ட் கொள்கையை தங்கள் போர்வாளாக ஏந்தி உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கத்தையும் விழிப்புணர்சியையும் தந்து, நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிரான மூலகத்தையும், விவசாய எழுச்சி போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

பாட்டாளிகள், பணம் படைத்தவர்முன் நின்று பேசவோ, ஏதிர்குரல் கொடுக்கவோ பயப்பட்டு வந்த காலத்தில் அப்பு, சிருகண்டன் தங்கள் மாஸ்டர் மற்றும் மார்க்சிஸ்ட் தோழர்களின் வழிப் பாதையை பின்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரிதும் பாடுபட்டனர். படிப்பறிவு குன்றிய விவசாய மக்களுக்கு மாலை நேரத்தில் நாளிதழ் வாசிப்பு பயிற்சி, பெரும் சுரண்டலை ஏதிர்த்து கேள்வி கேட்கும் திறன், சுயஉரிமைக்காக போராடும் மனோபாவம் முதலியவற்றை வித்திட்டனர். நம்பியாரின் சூழ்ச்சியால் சிருகண்டனின் விளைநிலத்தை அபகரிக்கப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த கையூர் விவசாயிகளின் அடிமைவிலங்கை விடுவிக்க அந்த இளம் வீரப்புரட்சியளர்கள், வீரமுழக்கமிட்டு விவசாயிகளின் விடுதலைக்காக போராடினர்.

நம்பியார், நம்பூத்ரியின் ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்து நடந்த கையூர் விவசாய சங்கத்து ஊர்வலத்தில், ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த சுப்பய்யன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் மாப்புடன் ஊர்வலத்தை தடுக்க முற்பட்டு, அதனால் கொதித்தெழுந்த விவசாயிகள் அவனுடன் கைகலப்பில் ஈடுப்படுகின்றனர். தன்னை காப்பற்றிக் கொள்ள தேஜஸ்வினி ஆற்றில் குதித்து கரை சேரமுடியாமல் உயிர்விடுகிறான்.

சுப்பய்யனின் இறப்புக்கு கம்யூனிஸ்ட் தோழர்களான அப்பு, அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு சம்மந்தமில்லாத போதும் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்றனர். உலக மற்றும் இந்திய மக்களின் எதிர்ப்பையும், வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசும் மற்றும் நிலப்பிரபுக்களும், 25-தே வயதுக்குட்பட்ட நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர் தோழர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. வீரம் விளைந்த கையூர் தியாகிகளின் வீரம் மிக்க போராட்ட சம்பவத்தையும், உயிர்த் தியாகத்தையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புனைவு தான் இந்த "நினைவுகள் அழிவதில்லை" நாவல்.

- 1954-ல் பிரபல கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா கலை ஏண்ணத்தில் உருவான "சிரஸ்மரணா" என்ற மூலநாவல் பிற்பாடு மலையாளத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு, 1977-ல் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நூல் 2008 வரை ஒன்பது பதிப்புகளை கண்டுள்ளது.

- 1943-ல் கையூர் சம்பவம் நடந்த போது நிரஞ்சனாவின் வயது 7.

- மலையாள மண்ணில் நடந்த சம்பவத்தை கன்னடத்தில் கதையாக்கி மொழிக்கடந்து கன்னட மக்களை உலுக்கிய நிகழ்வுகள் பல உண்டு.

- "The Hindu" நாளிதளின் ஆசிரியர் என்.ராம் மற்றும் பல தோழர்களின் தூண்டுதலால் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் 1975-77 அவசர காலத்தில் தலைமறைவிலிருந்தபோது தமிழாக்கம் செய்யப்பட்ட நாவலிது.

- இந்தக் கதை, லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இந்நூல் கம்யூனிஸ்ட் பிரச்சார நூலாக இல்லாமல், ஒரு தலைச்சிறந்த இலக்கிய படைப்பாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. என் வலைப்பூவில் பகிர மட்டுமே செய்யும் நான் இந்த தேர்ந்த இலக்கிய படைப்பை மறவாது வாசித்து, பல்லாயிரம் மக்கள் வாசிக்கவும் உதவுங்கள் என்பது பதிப்பாளர் மற்றும் எனது வேண்டுகோள்.

இந்த நாவல் வாசிப்பின் முடிவில் கையூர் தியாகிகளின் வீரமும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த தோழர்களின் நினைவு அழியப்போவதுமில்லை, வாசித்தவர்கள் மனதைவிட்டு நீங்கப்போவதுமில்லை.

நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்), சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

இறக்கை முளைத்த விதி - உலக சிறுகதை தொகுப்பு


உலகின் சிறந்த எழுத்தாளர்களின் தனித்துவமான சிறுகதைகளை , தமிழாக்கம்செய்து , அதன் தேர்ந்த தொகுப்பு தான் இந்த ' இறக்கை முளைத்த விதி' .

தமிழாக்கம் என்பது பிறமொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்மொழி சொற்களைநிரப்புவதல்ல, மாறாக அது ஒரு கலை. “ மூலமொழியின் தன்மை,அதற்கேஉரிய தனிச்சிறப்பான பண்புகள், கதை உருவான சமூக பண்பாடுச்சூழல்,வரலாறு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதே வேளை தமிழ்மொழிக்கு உரிய ஒலிப் பண்புகள், சொற்களஞ்சியம், பேச்சு வழக்கு எனப்பலவற்றை மனதில் கொண்டு மூலமொழிக்குரிய தமிழ்ச் சொல்லைத்தேர்ந்தெடுக்கிறோம்” என்று வாசகர்களுக்கு “
மொழிப்பெயர்ப்பு எதன் பொருட்டு“ என்ற முன்னுரையில் விளக்குகிறார்.

எட்டு உலக சிறுகதைகள், அச்சிறுகதையாசிரியர்களின் சிறிய வாழ்கைவரலாறு , உலக இலக்கியத்தில் இச்சிறுகதைகளின் பங்கு , எந்த தொகுப்பில்இடம் பெற்றன என்ற ஒருபக்க தகவலுடன் சிறுகதைகள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


வென் யுஹோங்யின் (wen yuhong ) - வெறி நகரம்

ஒரு தாய் வழிப் பிறந்த இரு சகோதர்கள், அவ்வூரில் உள்ள நாய்களைசித்ரவதை செய்து கொன்று குவிக்கின்றனர். நாளடைவில் நாய்களைகொல்வதற்கான, அரசாங்க உரிமம் கிடைக்க,அதையே தொழிலாகசெய்கின்றனர். நாய்களோடு நில்லாமல் தாங்களை மதிக்க மறுக்கும்மனிதர்களையும் கொன்று குவிக்கின்றனர். அவர்கள் வன்முறையின்உச்சத்தின் போதே மாயமென மறைந்து விடுகின்றனர். பின் போலீசாரிடம்விசாரிக்கையில், அவர்கள் காவல்துறையில் சேர்ந்துவிட்டதாகவும், திரும்பவும் நாய் வேட்டைக்கு வருவார்கள் எனவும் கூறுவது போலவும் கதைநிறைவு பெருகிறது. சீனாவின் “பண்பாட்டு புரட்சியின்“ பின்னணியில்எழுதப்பட்ட மற்றும் சர்ச்சைக்குள்ளான கதையிது .


அண்ணா பாவ் சாத்தேயின்(Anna Bau Sathe) - மயானத் தங்கம்

கல்லுடைக்கும் இடத்தை மூடிவிட்டதால் தன் வேலையை இழக்கும் பீமா தன்குடும்பத்தை காப்பாற்ற மயானத்தில் உள்ள பிணங்களின் தங்கத்தைத் திருடிவாழ்க்கையை நடத்துகிறான். எப்போதும்போல ஒரு இரவு மயானத்துக்குச்செல்ல அன்று நடக்கும் விபரீதத்தால் தன் விரல்களை இழக்கிறான். அந்நேரம்பார்த்து அவனுக்கு கல்குவாரியில் வேலைக்கு வருமாறு அழைப்பும்கிடைக்கிறது. எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் பீமா தவிப்பது போலகதை நிறைவு பெறுகிறது.


பிரா சுதம்யின்(Pira Sudham) - ஜெர்மனியில் ஒரு தாய்லாந்துப் பெண்

தாய்லாந்தில் வேசியாக இருந்த பெண் ஜெர்மானியரை மனந்து நல்ல குடும்பவாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். அப்பெண்மணி தன் சக நாட்டவருக்கு தன்திருமண வாழ்வில் கிடைக்கும் சந்தோஷங்களையும், தன் தாய் நாட்டைவிட்டுப் பிரிந்த சோகத்தையும் பதிவு செய்கிறாள். கதை ஒரு வேசியின்வாழ்வில் நடந்த அவலங்களையும், ஜெர்மானியில் குடும்ப வாழ்க்கையின்நிறைவையும், சந்தோஷங்களையும் பகிர்வது போல அமைந்துள்ளன.


மாக்சிம் கார்க்கியின்(Maxim Karki) – புயற் பறவையின் கீதம்

பெரிய கடல் பறவைகள், பென்குயின்கள் யாவும் கடலையும், காற்றையும்அஞ்சிப் பகுந்திட, புயற் பறவை மட்டும், கடலில் உள்ள வெள்ளி நுரைததும்பும் நீர்ப்பரப்புக்கு மேல், அம்பு போல மேகங்களைப் பிளந்து ஒலிஎழுப்பியவாறு, புயலுக்கு அஞ்சாமல் பறக்கிறது. இளம் சோஷலிசசக்திகளுக்கு ஜார் அரசை எதிர்த்து புரட்சியில் இடுபட புயற் பறவைஉவமையாக பொருட்படுத்தி எழுதிய சிறுகதை.


உலக சிறுகதைகளை தமிழ் இலக்கியத்துக்கு எடுத்து காட்டியதற்காகவும், அழகாகவும், புரியும்படி சொல்லமைத்து தமிழாக்கம்
செய்தமைக்கு ஆசிரியர்கள் வ.கீதவுக்கும் , எஸ்.வி. ராஜதுரைக்கும் வணங்குதல் மேன்மையே.

இறக்கை முளைத்த விதி - .கீதா & எஸ்.வி.ராஜதுரை , அடையாளம் பதிப்பகம் , ரூ.70.00

பூமணியின் 'வெக்கை'


ஒரு காலைப் பொழுதில் நானும் என் மாமாவும் அவரின் தோட்டத்திற்கு காரில் பயனித்தோம். மழைக்காலம் என்பதனால் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் மேகமும் , சிறு சாரலுமாக நல்ல இயற்கை சூழல் இருந்தது. போகும் வழியில் பூமணியின் சிறுகதை தொகுப்பில் இருந்து சில கதைகளை சொன்ன வாரு பூமணியின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதுவரை கி.ராவின் கரிசல் எழுத்தை தவிர வேறொரு கரிசல் எழுத்தை அறிந்திராத எனக்கு பூமணியின் எழுத்தினை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. அவரின் "பிறகு" என்ற நாவலை வெகு நாட்களாக எங்கு தேடியும் கிடைக்காமல் (இன்றுவரை) போனதால் அவரின் அடுத்த நாவலான "வெக்கை" என்ற நாவலை வாசிக்கலானேன்.

வடக்கூரானைக் கொலை செய்யும் சிதம்பரம், தன் மாமாவிடம் அடைக்களம் பெரும் நிகழ்வுடன் "வெக்கை " நாவலின் கதை ஆரம்பமாகிறது. தங்களால் செய்ய முடியாத காரி்யத்தை 15-தே வயதான சிதம்பரம் செய்ததை எண்ணி பெருமிதத்துடன், அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இரும்பு சுவர் போல காவல் காக்கின்றனர் அவன் மாமா பரமசிவமும், ஊர் சனங்களும்.

சிதம்பரத்தின் மாமா விவேகத்துடனும் விரைவுடனும் திட்டம் வகுத்து அதன்படி சிதம்பரத்தின் அம்மாவையும், தங்கையையும் அவன் சின்னையா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சிறுது காலம் ஊரைவிட்டு மறைந்து வாழும்படி சிதம்பரத்தையும், துணைக்கு அவன் அய்யாவையும் அனுப்பிவைக்கிறார். மாமாவின் சொற்படி தங்கள் ஊரைவிட்டுத் தலைமறைவாக ஆள் நடமாட்டமில்லாத மலை அடிவாரம், நீரோடை, மலையுச்சி, வயல்வெளி என்று தங்கி தங்கள் பொழுதை கழிக்கின்றனர். நாவலின் பெரும்பகுதி சிதம்பரம் மற்றும் அவன் அய்யாவின் பயணக் காலத்தை விவரிக்கிறது.

அவர்கள் இருவரின் பயணத்தின் போதுதான், சிதம்பரம் வடகூரானை வதைத்தது ஏன்? சிதம்பரத்தின் அன்பான அம்மா, பாசமான தங்கை, அன்புடன் அவன் வளர்த்த நாய் ஆகியவர்களின் நிலைமை என்ன ஆனது? பரமசிவம் மாமாவையும், அத்தையையும் பிறகு பார்க்க வாய்ததா? போலீசாரிடமிருந்தும், வடகூரானின் குடும்பத்தாரிடமிருந்தும் தப்பி பிழைத்தார்களா? போன்ற வினாக்களுக்கு விடையும் கிடைக்கிறது.

மனத்தாங்களும், சண்டை பூசல்களும் நிறைந்த இன்றைய காலத்தில், இந்நாவலில் வரும் பரமசிவம் மாமாவும், அத்தையும், அவன் சின்னய்யா மற்றும் ஊர் சனங்களும் ஒன்றாக அவனைக் காக்கும் ஒற்றுமை, வாசிப்பவர்களுக்கு ஏனோ தனக்கு கிடைக்காத போல ஒரு ஏக்கம் எற்படும். உழைக்கும் வர்கத்தினிடையேயுள்ள ஒற்றுமை தான் அவர்களின் வலிமை என்று உணர்த்தும் நாவல் இது .

பொருளாதாரத முன்னேற்றம் ஏற்படும்போது நல்ல சமுதாயத்தையும், நண்பர்களையும், உறவினர்களையும் இழந்து, தனிமரமான உணர்வினை ஏற்படுத்தும் இன்றைய சூழலில், ஒற்றுமையின் அர்த்தத்தையும்
வலிமையையும் உணர்த்தும் நாவல் இது .

வெக்கை - பூமணி, தமிழ் புத்தகாலயம் , ரூ..38.00

குறிப்பு:-

ஏற்கெனவே தனது 'கருவேலம் பூக்கள்' கதையை படமாக்கிய பூமணி, 'வெக்கை' யும் , திரைப்படமாக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன் .

ஷோபா சக்தியின் ' ம் '


பலமுறை வாசிக்க நினைத்து பின்னர் ஏதோ காரணத்தால் வாசிக்காமல் புறக்கணித்த புத்தகம், ஷோபா சக்தியின் ' ம் ' நாவல் . உயிர்மை ஜெயகுமாரிடம் ஈரோடு புத்தகசந்தையில் இந்நாவலைப் பற்றிய சிறுமுன்னுரை கேட்ட போதும் கூட 'ம்' கொட்டிவிட்டு பிற நாவல்களை வாசித்துக் கொண்டு இருந்தேன். பின் ஒரு சனிக்கிழமை இரவில் வாடைக் காற்று வதைத்து எடுக்கும் பொழுதில் வாசிக்க ஆரம்பித்து , பித்துப் பிடித்தவன் போல இரண்டே நாள் இரவில் வாசித்து முடித்த என் முதல் நாவல்.

வரலாற்றுப் பின்னணி , உண்மைச்
சம்பவங்கள்,
உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் என்று தன் கதை வாசிப்பவர் மனதில் வடு விழுமாறு படைத்து உள்ளார் ஷோபா சக்தி.

கதை, அய்ரோப்பாவில் வாழும் அகதியான நேசகுமரனின் சுயசரிதையை பற்றியது . இளம் வயது நேசகுமரனை பாதிரிக்குப்
படிக்க கொழும்புக்கு அனுப்ப , அவனோ புரட்சி இயக்கங்களுடன் தன் பொழுதை கழிக்கிறான். தன் புரட்சி இயக்கத்துக்குரிய நடவடிக்கையில் தோல்வியுற்று, கைதாகி சிங்கள ராணுவ முகாம்மான பனாக்கொடவில் சிறைப் படுத்தப்படுகிறான்.அங்கு நடத்தப்படும் மனித சித்தரவதையை கண்டும்,கேட்டும் ( முக்கியமான, செவித்துவாரத்துகுள் பென்சில்லை நுழைத்து மரண அடி அடிக்கும் கொலை நுட்பம்) சிறை வாழ்க்கையை தொடங்குகிறான். சில நாட்களில் தமிழ் அரசியல் கைதிகளுடன் நரகம் என்று மதிக்கப்படும் வெலிகட பெருஞ்சிறையில் அடைக்கபடுகிறான். அங்கு தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் எமனின் சாவுக்கயிற்றில்அகப்பட்டு உயிர் தப்புகிறான். பிற்பாடு மட்டக் களப்புச் சிறைக்கு மாற்றலாகி, அங்கு குழுவாக சிறையுடைத்து தன் சிறைத் தோழன் பக்கிரியுடன் சிறிதே காலம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் ஊரூக்கு திரும்பும் வழியில் வேற்று கருத்து கொண்ட குழுவால் கைது செய்யப்பட்டு தாய்மண்ணிலேயே பக்கிரியை பலிக் கொடுக்கிறான்.

பிறகு நடந்தவையே இந்த நாவலுக்கு கருவாக அமைந்த நிறமியின்(
நேசகுமரனின் மகள் ) கர்ப்பத்துக்கான கேள்வி, அதுவே நாவலின் தொடக்கமும்.அதற்கான விடையே இந்த நாவலின் இறுதி அத்தியாயம்.

18ம் வயதில் Henri Charrière -யின்
பட்டாம்புச்சி(Papillon - English) படித்த போது ஏற்பட்ட பதட்டமும் விருவிருப்பும் இந்நாவல் வாசிப்பில் உணர்ந்தேன். கதையின்/நேசகுமரனின் இறுதி அத்தியாயம் சலனம்மடைய வைத்தாலும், அதற்குமுன்னர் வரை பாம்பின் வேகத்திற்கு குறையாத சுறுசுறுப்பும்,விருவிருப்புடன், விரைகிறது இந்த 'ம்' நாவல் .

ம் - ஷோபா சக்தி , கருப்புப் பிரதிகள் பதிப்பகம், ரூ 80

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்


வண்ணநிலவனின் கம்பாநதி , கடல்புரத்தில் நாவல் இருந்த போதிலும் அவரின் ரெயினீஸ் ஐயர் தெரு படிக்கும் ஆர்வத்தை எற்படுத்தியது அதன் முன்னுரை. மத்தியவர்க்க மக்களின் வாழ்கை போராட்டம், அவர்களுடைய
ஆசைகள் , வாழ்கை முறை என்று அழகாக கதை சொல்லும் பாணி அவர் பலம் என்று என் மாமா சொல்லி கேள்விப்பட்டேன்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது சாலைப்புதூர் என்ற கிராமத்தில் வசித்தோம்.எதிர் எதிரே மொத்தம் எட்டு வீடுகள், இருபுறமும் கரும்பு தோட்டங்கள். எங்கள் வீட்டின் பின்புறத்தில் பெரிய ஆலமரம் அதன் அருகே இரயில் தண்டவாளங்கள், மூன்று மணிக்கு ஒருமுறை இரயில் வருவதும் போவதுமாக தன் பணியை செய்துகொண்டு இருக்கும். எங்கள் தெரு ஒரு அழகான இயற்கை சூழ்ந்த இடம். வாரத்தின் விடுமுறை நாட்களில் கரும்பு தோட்டத்தில் விளையாடுவதும், தோட்டத்துக்கு பாயும் தண்ணீர் தொட்டியில் உல்லாசமாக குளிப்பதும், எதிர் வீட்டில் உள்ள லீமா அக்காவிடம் ராணி காமிக்ஸ், சிறுவர் மலர் படிக்க சொல்லி கேட்பதும், பிக்னிக் செல்வது போல சனிக்கிழமை தோறும் எங்களை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அல்லது மலை மேடுக்கும் அழைத்து சென்று புராண கதை சொல்லும் அன்பான கதிரேசன் அண்ணன் மற்றும் சாரதா டீச்சர்,பெரிய பாட்டி என்று அன்பான மக்கள் வாழ்ந்த தெரு. ஒரு உல்லாசமான தனி உலகம் போல உணர்ந்தோம். இன்று வரை பல ஊர்களுக்கு மாற்றலாகி போயும் சாலைப்புதூரில் கிடைத்த அக்கம்பக்கம் வீட்டார்கள் போல வேறு எங்கும் வாய்த்தது இல்லை(என் அன்னையின் கூற்றும் இதுவே)

இந்நாவலில் வரும் ரெயினீஸ் ஐயர் தெரு, அத்தெருவில் வசிக்கும் மனிதர்கள் என்று அனைத்தும் எங்கள் தெரு போலவே நடுத்தரவர்க்க மனிதர்கள், பயன் கருதி அன்பு காட்டுப்பவர்கள் இல்லை , சமுதாய வளிர்ச்சியால் நவ நாகரிகத்தை கைபிடித்தவர்களும் இல்லை. எண்பதுகளில் வாழ்ந்த மிகச் சாதாரணமான, நம் பக்கத்து வீட்டில் வாழ்ந்த அன்பான மனிதர்கள் .

ஒரு அழகான தெரு, அதில் வாழும் மனிதர்கள் , அவர்களுடய வாழ்கை போராடத்தை வைத்து மிக நேர்தையாகவும் அழகாகவும் கதையமைத்து உள்ளார் கதாசிரியர். மேலும் ரெயினீஸ் ஐயர் தெரு மக்கள் யாவரும் மழைக்கு அடிமையாக சித்தரித்து, வாசிப்பவர்கள் மனதில் ஒரு இனிமையான எண்ணத்தையும் எற்படுத்துகிறார். எனோ இந்த நாவல் வாசிப்பின் முடிவில் எங்கள் சாலைப்புதூர் கிராமத்தெரு வைத்து கதை அமைத்தது போல ஒரு எண்ணம் படுகிறது. வாசிப்பவர் அனைவர்க்கும் இந்த எண்ணம் தோன்றும்.

நினைவுகள் அழகாக உள்ளபோது எண்ணங்கள் இனிமையாக
இருக்கும்.

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன், கிழக்கு பதிப்பகம், ரூ 70


வாடிவாசல் - சி.சு.செல்லப்பா


அமரர் சி.சு.செல்லப்பாவின் அறிமுகத்தை எஸ். ரா வின் வாசக பர்வம் கட்டுரையில் அறிந்தேன். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்ததாகவும், எழுத்து மற்றும் மணிக்கொடி இதழ்களை நடத்த செல்லப்பா பட்ட இன்னல்களையும் பதிவு செய்திருந்தார்.அவர் படைப்பில் ஒன்றான வாடிவாசல் தமிழ் இலக்கியத்தில் மகுடம் சூட்டப்பட்ட குறு நாவல்களில் ஒன்று.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

ஜல்லிகட்டை விருமாண்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் பார்த்த எனக்கு வாடிவாசல் வாசிப்பின் முடிவில் நேரில் கலந்து கொண்ட அனுபவத்தை ஏற்படுத்தியது.ஏறுத்தழுவல் நாளன்று அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் முதல், ஜமீன்தாரின் காரிக் காளையை அடக்கப்பட்டது வரை நடக்கும் நொடிப்பொழுது சம்பவங்களை கதையாக்கப்பட்டுள்ளது.

பிச்சியும்,மருதனும் மாபிள்ளை மச்சினன்.பிச்சியின் தந்தையை முந்தைய ஜல்லிக்கட்டில் கொன்ற ஜமீன்தாரின் காரிக்காளையை அடக்க வாடிவாசலை களமாக தேர்ந்து எடுக்கிறான் .வாடிவாசல் கூட்டத்தில் கிழவன் கொடுக்கும் நுட்பமான தகவல்களை கொண்டு பிறர் அடக்க அச்சப்படும் பிள்ளைக்,கொராலு காளைகளை அடக்கி கூட்டத்தின் மரியாதையைகளையும்,மதிப்புகளையு
ம் பெறுகிறான் பிச்சி.காரிக்காளையை அடக்கவே வந்துள்ளான் என்று அஞ்சும் ஜமீன்தார் அவர் எண்ணத்தை போலவே காரிக்காளையை அடக்கி தன் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் மிகுந்த கவனத்துடனும் ,அதே போல தன் பழிவாங்கும் செயலில் வீரத்துடனும்,விவேகத்துடனும் பிச்சியின் கதாபாத்திரத்தை மனதில் பதியுமாறு கதயமைத்துள்ளார்.மேலும் வாடிவாசல் ஒரு நாவலாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டை பற்றிய நுட்பமான தகவல் கொண்ட களஞ்சியமாக படைத்துள்ளார் சி.சு.செல்லப்பா.

இக்குறுநாவலை எழுத்து பத்திரிக்கையின் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பினார் என்ற செய்தியும் உண்டு.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா, காலச்சுவடு
பதிப்பகம், ரூ 40

கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா


இராவுத்தர் ,லெப்பை இவை இரண்டும் தமிழை தாய்மொழியாக கொண்ட இரு இஸ்லாமிய பிரிவுகள்.பொருளதாரத்தை மையப்படுத்தி இராவுத்தர் உசத்தி, லெப்பை கீழ் என்று பிரிக்கப்பட்டவர்கள்.


உருவ வழிப்பாட்டுக்குத் தடை , வீட்டில் பிராணிகள் வளர்க்கத் தடை போன்ற கோட்பாடுகள் உள்ள சமூகத்தில் , முற்போக்கு சிந்தனை கொண்ட , இராவுத்தர்மார் ஒடுக்கத்தை எதிர்க்கும் எண்ணம் கொண்ட லெப்பை சமூகத்தில் பிறந்த கருத்த லெப்பையின் வாழ்வும் மரணமும் பற்றிய கதை .

தன் பாட்டி ராதிம்மாவிடம் நாயகத்தின் உருவத்தை கேட்டு மனனம் செய்து அடுத்தநாள் அதை படமாக வரைகின்றான் கருத்த லெப்பை . குழந்தைகளுக்கு விதவிதமாய் கைக்கடிகாரமும் மோதிரமுமாக மிட்டாய் செய்து தரும் அமீது மூலமாக தான் வரைந்த நாயகதின் படத்தை களிமண் உருவமாக செய்யப் பெறுகிறான். தனால் கல்லெறி பட்டு உயிரை விடுகிறான்.

கதைக்கு மாந்தர்கள் சுமையாக இல்லாமல் , நமக்கு அவர்கள் நன்கு அறிமுகமாகும் முன்னரே அவர்களுக்கு திரை மூடப்படுகிறது. உதாரணத்துக்கு
அபுபக்கர்,சின்னப்பேச்சி,ராதிம்மா மேலும் பலர் .

கதையின் போக்கினை கதாசிரியர் நன்றாக கையாண்டு, வாசகரை மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார் .

கதாசிரியர் லெப்பை இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை அழகாகவும் , இராவுத்தர்-லெப்பை வேறுபாடுகளை உறுத்தாத முறையிலும் பதிவு செய்துள்ளார்.


கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.