ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்


வண்ணநிலவனின் கம்பாநதி , கடல்புரத்தில் நாவல் இருந்த போதிலும் அவரின் ரெயினீஸ் ஐயர் தெரு படிக்கும் ஆர்வத்தை எற்படுத்தியது அதன் முன்னுரை. மத்தியவர்க்க மக்களின் வாழ்கை போராட்டம், அவர்களுடைய
ஆசைகள் , வாழ்கை முறை என்று அழகாக கதை சொல்லும் பாணி அவர் பலம் என்று என் மாமா சொல்லி கேள்விப்பட்டேன்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது சாலைப்புதூர் என்ற கிராமத்தில் வசித்தோம்.எதிர் எதிரே மொத்தம் எட்டு வீடுகள், இருபுறமும் கரும்பு தோட்டங்கள். எங்கள் வீட்டின் பின்புறத்தில் பெரிய ஆலமரம் அதன் அருகே இரயில் தண்டவாளங்கள், மூன்று மணிக்கு ஒருமுறை இரயில் வருவதும் போவதுமாக தன் பணியை செய்துகொண்டு இருக்கும். எங்கள் தெரு ஒரு அழகான இயற்கை சூழ்ந்த இடம். வாரத்தின் விடுமுறை நாட்களில் கரும்பு தோட்டத்தில் விளையாடுவதும், தோட்டத்துக்கு பாயும் தண்ணீர் தொட்டியில் உல்லாசமாக குளிப்பதும், எதிர் வீட்டில் உள்ள லீமா அக்காவிடம் ராணி காமிக்ஸ், சிறுவர் மலர் படிக்க சொல்லி கேட்பதும், பிக்னிக் செல்வது போல சனிக்கிழமை தோறும் எங்களை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அல்லது மலை மேடுக்கும் அழைத்து சென்று புராண கதை சொல்லும் அன்பான கதிரேசன் அண்ணன் மற்றும் சாரதா டீச்சர்,பெரிய பாட்டி என்று அன்பான மக்கள் வாழ்ந்த தெரு. ஒரு உல்லாசமான தனி உலகம் போல உணர்ந்தோம். இன்று வரை பல ஊர்களுக்கு மாற்றலாகி போயும் சாலைப்புதூரில் கிடைத்த அக்கம்பக்கம் வீட்டார்கள் போல வேறு எங்கும் வாய்த்தது இல்லை(என் அன்னையின் கூற்றும் இதுவே)

இந்நாவலில் வரும் ரெயினீஸ் ஐயர் தெரு, அத்தெருவில் வசிக்கும் மனிதர்கள் என்று அனைத்தும் எங்கள் தெரு போலவே நடுத்தரவர்க்க மனிதர்கள், பயன் கருதி அன்பு காட்டுப்பவர்கள் இல்லை , சமுதாய வளிர்ச்சியால் நவ நாகரிகத்தை கைபிடித்தவர்களும் இல்லை. எண்பதுகளில் வாழ்ந்த மிகச் சாதாரணமான, நம் பக்கத்து வீட்டில் வாழ்ந்த அன்பான மனிதர்கள் .

ஒரு அழகான தெரு, அதில் வாழும் மனிதர்கள் , அவர்களுடய வாழ்கை போராடத்தை வைத்து மிக நேர்தையாகவும் அழகாகவும் கதையமைத்து உள்ளார் கதாசிரியர். மேலும் ரெயினீஸ் ஐயர் தெரு மக்கள் யாவரும் மழைக்கு அடிமையாக சித்தரித்து, வாசிப்பவர்கள் மனதில் ஒரு இனிமையான எண்ணத்தையும் எற்படுத்துகிறார். எனோ இந்த நாவல் வாசிப்பின் முடிவில் எங்கள் சாலைப்புதூர் கிராமத்தெரு வைத்து கதை அமைத்தது போல ஒரு எண்ணம் படுகிறது. வாசிப்பவர் அனைவர்க்கும் இந்த எண்ணம் தோன்றும்.

நினைவுகள் அழகாக உள்ளபோது எண்ணங்கள் இனிமையாக
இருக்கும்.

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன், கிழக்கு பதிப்பகம், ரூ 70