The Page Turner


பத்து வயது நிரம்பிய மெலின்க்கு(Mélanie) பியானோ வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு. அவளின் பெற்றோர் கசாப்பு கடை நடத்துபவர்கள். எந்த ஒரு இசை பின்புலத்தில் வளராத மெலின்க்கு பியானோ வாசித்தல் இயற்கையளித்த பரிசு போல, தன் உயிர்நாடியாக நேசிக்கிறாள்.

கன்செர்வடோரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெருவதற்காக தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்கிறாள். தேர்வு நடக்கும் முதல் நாள் இரவில் தன் தந்தையிடம், தான் தேர்வில் வாசிக்கும் இசையை வாசித்துக்காட்டி தன் தந்தையை லயத்தில் மிதக்கவைகிறாள். தன் மகளின் ஆர்வத்திற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக, தேர்வில் எந்த முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகின்றார். ஆனால் அவளோ அப்படி ஏதாவது நடந்தால் பின் வாசிப்பதையே நிறுத்திவிடுவதாக பதிலளிக்கிறாள்.

தேர்வாளர் குழுவில் நடுவராக இருக்கும் அரியானே பௌசெகுர்ட்(Ariane Fouchecourt) மிக
பிரபலமான பியானிஸ்ட் பல மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். தேர்வாளர்கள் முன் தன் இசையை வாசிக்கும் மெலின், அரியானேவின் முன்யோசனையற்ற நடத்தையினால், தான் வாசித்துக் கொண்டும் இருக்கும் இசையை முழுமையாக வாசிக்க முடியாமல் தடையுற்று தேர்வில் தோல்வியுருகிறாள். வெற்றியை மட்டுமே தன் இலக்காக எண்ணிய மெலினுக்கு, தோல்வியை ஏற்றுக்கொள்ள அவளின் மனது மறுக்கிறது. தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படையாக கட்டாமல் நீங்கா வடுவாக மனதில் புதைத்து வைக்கிறாள். தான் முடிவு செய்தது போல பியானோ வாசிப்பதையும் நிறுத்திவிடுகிறாள்.

காலம் பல கடந்தோட, வடுபட்ட மனதோடு வளர்கிறாள் மேலின். பியானோ வாசிப்பதை விடுத்த மேலின் பிரபலமான வக்கீல் அலுவலகத்தில் பணிக்கு சேருகிறாள். அங்குதான் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிய அரியானேனின் கணவனான ஜீன்(jean)-னை சந்திக்கிறாள். ஜீன் சில காலம் வெளியூர் செல்வதால் தன் மகன் த்ரிஸ்டன்(tristan)-யும், தன் அன்பான மனைவி அரியானேனையும் கவனித்துக் கொள்ள ஒரு செவிலித்தாய் தேடுவதாக தன் மூத்த பணியாளர் மூலமாக அறிகிறாள் மேலின். ஜீனிடம் அப்பணியை செய்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள். மேலினை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் வீட்டைச் சுற்றி காட்டியவாரு தன் அன்பான மனைவி அரியானேனை பற்றியும் சிறு தகவல்களை கூறுகிறான். அரியானே ஒரு தேர்ந்த பியானிஸ்ட் என்றும், சில காலம் முன் கார் விபத்தினால், எந்த செயல் செய்வதற்கும் பயப்படுகிறாள் என்றும், எப்பொழுதும் ஒரு துணை வேண்டுகிறாள் என்று கூறி அரியானேனையும், த்ரிஸ்டனையும் அறிமுகப்படுத்துகிறான் ஜீன் .

மேலின் அமைதியாகவும், பொறுமையுடன் தன் பழிவாங்கள் செயலில் ஈடுபடுகிறாள். விளையாட
ஆளில்லாத த்ரிஸ்டனிடம் தோழமையுடன் பழகி அவனின் அன்பைப் பெறுகிறாள். மேலும் அவனுக்கு பியானோவில் புதிய இசையையும் கற்றுத்தருகிறாள். ஒருநாள் அரியான் தன் மேடை நிகிழ்ச்சிக்காக பியானோவில் ஒத்திகை பார்க்கும் பொழுது, அவளின் இசைக்கு ஏற்றவாறு இசைப் புத்தகத்தின் பக்கங்களை திருப்புகிறாள் மெலின். தனக்கும், மெலினுக்கும் பியானோ வாசிப்பில் ஒத்த சிந்தனை இருப்பதை எண்ணி தனக்கு முழுநேரப் பேஜ் டேனராக(Page Turner) இருக்க வேண்டுகிறாள். அதற்கு மெலின் சம்மதமும் தெரிவிக்கிறாள்.

அரியானிடம் நெருங்கிப் பழகும் மெலின், ஒரு கட்டத்தில் அவளில்லாமல் தன் ஒரு அணுவும் இயங்காது என்று முடிவுக்கு வருகிறாள். மெலின் தன் திட்டத்தின் உச்சக்கட்டமாக அரியானை தன்மேல் காதல் வயப்படவைக்கிறாள். இதற்கிடையில் மெலின் தன் பணிக்காலம் முடிவடைந்து தன் ஊருக்குச் செல்ல தயாராகுகிறாள். அவ்வீட்டை விட்டு போகும்போது அரியானேவின் வாழ்க்கைக்கு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டு செல்வது போல படம் நிறைவுபெறுகிறது.

நான்கு கதாப்பாத்திரத்தை சுற்றி எடுக்கப்பட்ட படம், நான்கில் மெலின் கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கிறது. அழகான நீண்ட தங்கநிறக் கூந்தல், உடலுக்கு பொருத்தமான மேலங்கி, பணிவான நடத்தையில் சூழ்ச்சி, தவறில்லாத பழிவாங்குதல் முறை என்று தன் பாத்திரத்தை நிறைவாக நடித்துள்ளார் தேபோராஹ் பிரான்கோயிஸ்(Déborah François) .

இப்படம் 2006-ம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு திரைப்படம். இதை இயக்கியவர் டெனிஸ் தேர்குர்ட் (denis dercourt). 2007-ம் ஆண்டின் சிறந்த நடிப்பு, இசைக்கான செசார் (César) விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்.