ஷோபா சக்தியின் ' ம் '


பலமுறை வாசிக்க நினைத்து பின்னர் ஏதோ காரணத்தால் வாசிக்காமல் புறக்கணித்த புத்தகம், ஷோபா சக்தியின் ' ம் ' நாவல் . உயிர்மை ஜெயகுமாரிடம் ஈரோடு புத்தகசந்தையில் இந்நாவலைப் பற்றிய சிறுமுன்னுரை கேட்ட போதும் கூட 'ம்' கொட்டிவிட்டு பிற நாவல்களை வாசித்துக் கொண்டு இருந்தேன். பின் ஒரு சனிக்கிழமை இரவில் வாடைக் காற்று வதைத்து எடுக்கும் பொழுதில் வாசிக்க ஆரம்பித்து , பித்துப் பிடித்தவன் போல இரண்டே நாள் இரவில் வாசித்து முடித்த என் முதல் நாவல்.

வரலாற்றுப் பின்னணி , உண்மைச்
சம்பவங்கள்,
உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் என்று தன் கதை வாசிப்பவர் மனதில் வடு விழுமாறு படைத்து உள்ளார் ஷோபா சக்தி.

கதை, அய்ரோப்பாவில் வாழும் அகதியான நேசகுமரனின் சுயசரிதையை பற்றியது . இளம் வயது நேசகுமரனை பாதிரிக்குப்
படிக்க கொழும்புக்கு அனுப்ப , அவனோ புரட்சி இயக்கங்களுடன் தன் பொழுதை கழிக்கிறான். தன் புரட்சி இயக்கத்துக்குரிய நடவடிக்கையில் தோல்வியுற்று, கைதாகி சிங்கள ராணுவ முகாம்மான பனாக்கொடவில் சிறைப் படுத்தப்படுகிறான்.அங்கு நடத்தப்படும் மனித சித்தரவதையை கண்டும்,கேட்டும் ( முக்கியமான, செவித்துவாரத்துகுள் பென்சில்லை நுழைத்து மரண அடி அடிக்கும் கொலை நுட்பம்) சிறை வாழ்க்கையை தொடங்குகிறான். சில நாட்களில் தமிழ் அரசியல் கைதிகளுடன் நரகம் என்று மதிக்கப்படும் வெலிகட பெருஞ்சிறையில் அடைக்கபடுகிறான். அங்கு தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் எமனின் சாவுக்கயிற்றில்அகப்பட்டு உயிர் தப்புகிறான். பிற்பாடு மட்டக் களப்புச் சிறைக்கு மாற்றலாகி, அங்கு குழுவாக சிறையுடைத்து தன் சிறைத் தோழன் பக்கிரியுடன் சிறிதே காலம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் ஊரூக்கு திரும்பும் வழியில் வேற்று கருத்து கொண்ட குழுவால் கைது செய்யப்பட்டு தாய்மண்ணிலேயே பக்கிரியை பலிக் கொடுக்கிறான்.

பிறகு நடந்தவையே இந்த நாவலுக்கு கருவாக அமைந்த நிறமியின்(
நேசகுமரனின் மகள் ) கர்ப்பத்துக்கான கேள்வி, அதுவே நாவலின் தொடக்கமும்.அதற்கான விடையே இந்த நாவலின் இறுதி அத்தியாயம்.

18ம் வயதில் Henri Charrière -யின்
பட்டாம்புச்சி(Papillon - English) படித்த போது ஏற்பட்ட பதட்டமும் விருவிருப்பும் இந்நாவல் வாசிப்பில் உணர்ந்தேன். கதையின்/நேசகுமரனின் இறுதி அத்தியாயம் சலனம்மடைய வைத்தாலும், அதற்குமுன்னர் வரை பாம்பின் வேகத்திற்கு குறையாத சுறுசுறுப்பும்,விருவிருப்புடன், விரைகிறது இந்த 'ம்' நாவல் .

ம் - ஷோபா சக்தி , கருப்புப் பிரதிகள் பதிப்பகம், ரூ 80