பூமணியின் 'வெக்கை'
Posted by
Shyama
on Monday, March 15, 2010
Labels:
இலக்கியம்
ஒரு காலைப் பொழுதில் நானும் என் மாமாவும் அவரின் தோட்டத்திற்கு காரில் பயனித்தோம். மழைக்காலம் என்பதனால் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் மேகமும் , சிறு சாரலுமாக நல்ல இயற்கை சூழல் இருந்தது. போகும் வழியில் பூமணியின் சிறுகதை தொகுப்பில் இருந்து சில கதைகளை சொன்ன வாரு பூமணியின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதுவரை கி.ராவின் கரிசல் எழுத்தை தவிர வேறொரு கரிசல் எழுத்தை அறிந்திராத எனக்கு பூமணியின் எழுத்தினை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. அவரின் "பிறகு" என்ற நாவலை வெகு நாட்களாக எங்கு தேடியும் கிடைக்காமல் (இன்றுவரை) போனதால் அவரின் அடுத்த நாவலான "வெக்கை" என்ற நாவலை வாசிக்கலானேன்.
வடக்கூரானைக் கொலை செய்யும் சிதம்பரம், தன் மாமாவிடம் அடைக்களம் பெரும் நிகழ்வுடன் "வெக்கை " நாவலின் கதை ஆரம்பமாகிறது. தங்களால் செய்ய முடியாத காரி்யத்தை 15-தே வயதான சிதம்பரம் செய்ததை எண்ணி பெருமிதத்துடன், அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இரும்பு சுவர் போல காவல் காக்கின்றனர் அவன் மாமா பரமசிவமும், ஊர் சனங்களும்.
சிதம்பரத்தின் மாமா விவேகத்துடனும் விரைவுடனும் திட்டம் வகுத்து அதன்படி சிதம்பரத்தின் அம்மாவையும், தங்கையையும் அவன் சின்னையா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சிறுது காலம் ஊரைவிட்டு மறைந்து வாழும்படி சிதம்பரத்தையும், துணைக்கு அவன் அய்யாவையும் அனுப்பிவைக்கிறார். மாமாவின் சொற்படி தங்கள் ஊரைவிட்டுத் தலைமறைவாக ஆள் நடமாட்டமில்லாத மலை அடிவாரம், நீரோடை, மலையுச்சி, வயல்வெளி என்று தங்கி தங்கள் பொழுதை கழிக்கின்றனர். நாவலின் பெரும்பகுதி சிதம்பரம் மற்றும் அவன் அய்யாவின் பயணக் காலத்தை விவரிக்கிறது.
அவர்கள் இருவரின் பயணத்தின் போதுதான், சிதம்பரம் வடகூரானை வதைத்தது ஏன்? சிதம்பரத்தின் அன்பான அம்மா, பாசமான தங்கை, அன்புடன் அவன் வளர்த்த நாய் ஆகியவர்களின் நிலைமை என்ன ஆனது? பரமசிவம் மாமாவையும், அத்தையையும் பிறகு பார்க்க வாய்ததா? போலீசாரிடமிருந்தும், வடகூரானின் குடும்பத்தாரிடமிருந்தும் தப்பி பிழைத்தார்களா? போன்ற வினாக்களுக்கு விடையும் கிடைக்கிறது.
மனத்தாங்களும், சண்டை பூசல்களும் நிறைந்த இன்றைய காலத்தில், இந்நாவலில் வரும் பரமசிவம் மாமாவும், அத்தையும், அவன் சின்னய்யா மற்றும் ஊர் சனங்களும் ஒன்றாக அவனைக் காக்கும் ஒற்றுமை, வாசிப்பவர்களுக்கு ஏனோ தனக்கு கிடைக்காத போல ஒரு ஏக்கம் எற்படும். உழைக்கும் வர்கத்தினிடையேயுள்ள ஒற்றுமை தான் அவர்களின் வலிமை என்று உணர்த்தும் நாவல் இது .
பொருளாதாரத முன்னேற்றம் ஏற்படும்போது நல்ல சமுதாயத்தையும், நண்பர்களையும், உறவினர்களையும் இழந்து, தனிமரமான உணர்வினை ஏற்படுத்தும் இன்றைய சூழலில், ஒற்றுமையின் அர்த்தத்தையும் வலிமையையும் உணர்த்தும் நாவல் இது .
வெக்கை - பூமணி, தமிழ் புத்தகாலயம் , ரூ..38.00
குறிப்பு:-
ஏற்கெனவே தனது 'கருவேலம் பூக்கள்' கதையை படமாக்கிய பூமணி, 'வெக்கை' யும் , திரைப்படமாக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன் .
2 comments:
/--மழைக்காலம் என்பதனால் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் மேகமும் , சிறு சாரலுமாக நல்ல இயற்கை சூழல் இருந்தது.--/
அருமையான வரிகள்...
/--எனக்கு பூமணியின் எழுத்தினை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. அவரின் "பிறகு" என்ற நாவலை வெகு நாட்களாக எங்கு தேடியும் கிடைக்காமல் (இன்றுவரை) போனதால்--/
மேடவாக்கம் அருகில் பொன்னி பதிப்பகம் இருக்கிறது. ஊரைச்சிற்றி உலகத்தைச் சுற்றிப் போக வேண்டும். கண்டுபிடிப்பது அரிதுதான். அங்கு பூமணியின் மொத்தப் படைப்புகளும் நாவல், சிறுகதை என்று அனைத்தும் கிடைக்கிறது. சென்னையில் இருந்தால் முயற்சி செய்துபாருங்கள்.
கிருஷ்ண
என் நண்பர்களிடம் பொன்னி பதிப்பகம் பற்றிய தகவல் கொடுத்து உள்ளேன். கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற எண்ணம்.சேதிக்கு நன்றி கிருஷ்ணன்.
Post a Comment