நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை'


1940, பாரதம் ஆங்கிலேயர்களிடமும், விவசாயிகள் நிலப்பிரபுக்களிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த காலம். சிவப்புச் சிந்தனை சூறாவளி போல இளையோர்களிடமும், அடிமைப்பட்டுக்கிடந்த பாட்டாளிகளிடம் பரவிய காலமும் இதுவே. வடக்கு கேரளாவில் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்த கையூர்(தற்போது கண்ணனூர்) கிராமத்தில் நம்பியார், நம்பூத்ரி என்ற இரண்டு நிலப்பிரபுக்களிடம் தங்கள் உடைமைகளையும்,உழைப்பையும் அர்ப்பணித்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர் கையூர் விவசாயிகள். அதே ஊரைச் சேர்ந்த அப்பு, அபுபக்கர், சிருகண்டன், குஞ்ஞம்பு ஆகிய நான்கு தோழர்கள் கம்யூனிஸ்ட் கொள்கையை தங்கள் போர்வாளாக ஏந்தி உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கத்தையும் விழிப்புணர்சியையும் தந்து, நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிரான மூலகத்தையும், விவசாய எழுச்சி போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

பாட்டாளிகள், பணம் படைத்தவர்முன் நின்று பேசவோ, ஏதிர்குரல் கொடுக்கவோ பயப்பட்டு வந்த காலத்தில் அப்பு, சிருகண்டன் தங்கள் மாஸ்டர் மற்றும் மார்க்சிஸ்ட் தோழர்களின் வழிப் பாதையை பின்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரிதும் பாடுபட்டனர். படிப்பறிவு குன்றிய விவசாய மக்களுக்கு மாலை நேரத்தில் நாளிதழ் வாசிப்பு பயிற்சி, பெரும் சுரண்டலை ஏதிர்த்து கேள்வி கேட்கும் திறன், சுயஉரிமைக்காக போராடும் மனோபாவம் முதலியவற்றை வித்திட்டனர். நம்பியாரின் சூழ்ச்சியால் சிருகண்டனின் விளைநிலத்தை அபகரிக்கப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த கையூர் விவசாயிகளின் அடிமைவிலங்கை விடுவிக்க அந்த இளம் வீரப்புரட்சியளர்கள், வீரமுழக்கமிட்டு விவசாயிகளின் விடுதலைக்காக போராடினர்.

நம்பியார், நம்பூத்ரியின் ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்து நடந்த கையூர் விவசாய சங்கத்து ஊர்வலத்தில், ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த சுப்பய்யன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் மாப்புடன் ஊர்வலத்தை தடுக்க முற்பட்டு, அதனால் கொதித்தெழுந்த விவசாயிகள் அவனுடன் கைகலப்பில் ஈடுப்படுகின்றனர். தன்னை காப்பற்றிக் கொள்ள தேஜஸ்வினி ஆற்றில் குதித்து கரை சேரமுடியாமல் உயிர்விடுகிறான்.

சுப்பய்யனின் இறப்புக்கு கம்யூனிஸ்ட் தோழர்களான அப்பு, அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு சம்மந்தமில்லாத போதும் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்றனர். உலக மற்றும் இந்திய மக்களின் எதிர்ப்பையும், வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசும் மற்றும் நிலப்பிரபுக்களும், 25-தே வயதுக்குட்பட்ட நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர் தோழர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. வீரம் விளைந்த கையூர் தியாகிகளின் வீரம் மிக்க போராட்ட சம்பவத்தையும், உயிர்த் தியாகத்தையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புனைவு தான் இந்த "நினைவுகள் அழிவதில்லை" நாவல்.

- 1954-ல் பிரபல கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா கலை ஏண்ணத்தில் உருவான "சிரஸ்மரணா" என்ற மூலநாவல் பிற்பாடு மலையாளத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு, 1977-ல் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நூல் 2008 வரை ஒன்பது பதிப்புகளை கண்டுள்ளது.

- 1943-ல் கையூர் சம்பவம் நடந்த போது நிரஞ்சனாவின் வயது 7.

- மலையாள மண்ணில் நடந்த சம்பவத்தை கன்னடத்தில் கதையாக்கி மொழிக்கடந்து கன்னட மக்களை உலுக்கிய நிகழ்வுகள் பல உண்டு.

- "The Hindu" நாளிதளின் ஆசிரியர் என்.ராம் மற்றும் பல தோழர்களின் தூண்டுதலால் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் 1975-77 அவசர காலத்தில் தலைமறைவிலிருந்தபோது தமிழாக்கம் செய்யப்பட்ட நாவலிது.

- இந்தக் கதை, லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இந்நூல் கம்யூனிஸ்ட் பிரச்சார நூலாக இல்லாமல், ஒரு தலைச்சிறந்த இலக்கிய படைப்பாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. என் வலைப்பூவில் பகிர மட்டுமே செய்யும் நான் இந்த தேர்ந்த இலக்கிய படைப்பை மறவாது வாசித்து, பல்லாயிரம் மக்கள் வாசிக்கவும் உதவுங்கள் என்பது பதிப்பாளர் மற்றும் எனது வேண்டுகோள்.

இந்த நாவல் வாசிப்பின் முடிவில் கையூர் தியாகிகளின் வீரமும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த தோழர்களின் நினைவு அழியப்போவதுமில்லை, வாசித்தவர்கள் மனதைவிட்டு நீங்கப்போவதுமில்லை.

நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்), சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

0 comments:

Post a Comment